மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மருத்துவ மாணவர்கள் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியும் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கினர்.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் ஆதாரங்களை அழிக்க மமதா பானர்ஜி முயற்சித்தார்; குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது மமதா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு என்பது மருத்துவ மாணவர்களின் குற்றச்சாட்டு. மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாஜகவும் தம் பங்குக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசை விளாசி வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் பதவியில் இருந்து மமதா பானர்ஜி ராஜினாமா செய்யக் கோரி இன்று மாநில தலைமைச் செயலகத்தை மருத்துவ மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துதனர். கொல்கத்தா நகரின் இரு வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணிகள் புறப்பட்டு தலைமைச் செயலகத்தை மருத்துவ மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் இந்த போராட்டத்துக்கு அனுமதி தரவில்லை. அத்துடன் மாணவர்கள் போராட்டத்தை ஹவுரா பாலம் மற்றும் சந்த்ராகச்சி ஆகிய இடங்களிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதிகள் இரண்டும் போர்க்களமாகின.
ரயில்வே தண்டவாளங்களில் இருந்த கற்களை எடுத்து போலீசார் மீது மருத்துவ மாணவர்கள் சரமாரியாக வீசினர். இதனையடுத்து மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போலீசார் தடுக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் தலைமை செயலகம் நோக்கி முன்னேற முயன்ற மருத்துவ மாணவர்கள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தினர். இந்த மருத்துவ மாணவர்கள்- போலீசார் மோதலில் பலரும் படுகாயமடைந்தனர். மருத்துவ மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.