உமர் அப்துல்லாவுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு சந்திப்பு!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் நேற்று முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தேசிய துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதை பாஜக ஆதரவு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த ஆலோசனையின் போது, ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்கர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாடு நீக்க வேண்டும் என உமர் அப்துல்லா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக 15 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும் காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஎம், பேந்தர்ஸ் கட்சிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. 5 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

இந்த நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் உமர் அப்துல்லாவை இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரக உயர் அதிகாரிகள் குழு நேற்று சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியது. பொதுவாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதில்லை என்ற போதும் சட்டசபை தேர்தல் உள்ளிட்டவைகளின் போது தீவிரமாக கண்காணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் குழு சென்று அரசியல் கட்சிகள் தலைவருடன் ஆலோசனைகள் மேற்கொண்டும் இருக்கின்றன. இதனடிப்படையில் உமர் அப்துல்லாவுடன் அமெரிக்கா தூதரக அதிகாரிகள் குழுவின் சந்திப்பும் ஜம்மு காஷ்மீர் தேர்தலை மையமாகக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பு தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சித் தரப்பில், ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் குழு உமர் அப்துல்லாவுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தியது. ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடைகள், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று உமர் அப்துல்லா இந்த ஆலோசனையின் போது வேண்டுகோள் விடுத்தார். முதல் கட்டமாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் உமர் அப்துல்லா கேட்டுக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் தன்வீர் சாதிக் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் பிராந்திய நிலைமை தொடர்பாக பொதுவான விவாதங்களே இந்த சந்திப்பில் நடைபெற்றது என்கிறார்.