அமெரிக்காவுக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சைக்காக சென்ற திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா தர்மசாலாவுக்கு திரும்பினார். தர்மசாலா திரும்பிய தலாய் லாமாவுக்கு, நூற்றுக்கணக்கானோர் மலர்களை தூவியும், பாரம்பரிய நடனமாடியும் விமான நிலையம் முதல் வீடு வரை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த ஜூன் 28ஆம் தேதி முழங்கால் அறுவைச் சிகிச்சைக்காக நியூயார்க் சென்ற தலாய் லாமா(வயது 89), சிகிச்சைக்கு பிறகு அங்குள்ள பண்ணை வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். நியூயார்க்கில் வயதானவர்களுக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு புகழ்பெற்ற மருத்துவர் டேவிட் மேனன், தலாய் லாமாவுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். தலாய் லாமாவின் முழங்கால் முழுமையாக சரியாக இன்னும் 6 முதல் 12 மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தலாய் லாமாவின் இயன்முறை மருத்துவர்கள்(பிசியோதெரபிஸ்ட்) கூறுகையில், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அவர் வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஹிமாசல் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவை தலைமையிடமாக கொண்டு வசித்து வரும் 14-வது தலாய் லாமாவை ஒரு லட்சத்துக்கும் அதிகமான திபெத்திய பெளத்த மதத்தினர் பின்தொடர்ந்து வருகின்றனர்.