கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கார்த்தி சிதம்பரம்!

கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதாக இது நாள் வரையில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை இதனை வெளியிட வேண்டும் என்றும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் ஆகஸ்ட் மாதத்துக்கான மாநகராட்சி கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் தங்கள் கோரிக்களை தெரிவித்து பேசினார்கள். அதற்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். சிலரின் கேள்விகளுக்கு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பதில் அளித்தார்.

இந்நிலையில் கூவம் ஆறு சீரமைப்பு குறித்து பேசிய மேயர் பிரியா, சென்னை எம்ஜிஆர் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் கால்வாய் பணிகள் தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் அடுத்த 20 நாட்களில் இந்த பணிகள் முடிக்கப்படும். மேலும், மின்சாரத்துறை சார்பாக 200 மீட்டர் தூரத்திற்கு கேபிள் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் ஒரு மாதத்தில் நிச்சயம் முடிக்கப்படும். அதேபோல, இரண்டு மாதத்தில் சென்னையில் உள்ள அனைத்து விளையாட்டு திடல்களிலும் வாட்ச்மேன் நியமிக்கப்பட உள்ளார்கள். நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது போல், பெண்களுக்கு என தனியாக உடற்பயிற்சிக் கூடம் கட்டுவதற்கான தனி பட்ஜெட்டை ஒதுக்கி உள்ளோம். கையடக்க கணினி வழங்கப்படும் என்று கடந்த மாநகராட்சி பட்ஜெட்டிலேயே அறிவித்திருந்தோம். அடுத்த மாநகராட்சி கூட்டத்தில், அனைவரின் கைகளிலும் கையடக்க கணினி இருக்கும். அதேபோல், பக்கிங்காம் கால்வாயில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு தொடந்து கண்காணிக்கப்படும். மேலும், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒரு ஆண்டு தான் அரசாணை வந்துதிருக்கிறது. இது குறித்து அரசிற்கு தெரிவித்து, நகர்ப்புற வேலைவாய்ப்புகளை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதனிடையே கூவம் சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நொளம்பூர் மண்டல தலைவர் வி.ராஜன் கேள்வி எழுப்பி பேசுகையில், 1980கள் வரை கூவம் சுத்தமாக இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது,​​ நதியை மீட்டெடுக்க சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டார். இப்போது எனது வார்டு உள்ள மதுரவாயல் அருகே கூவம் ஆற்றின் நிலையை வந்து பார்த்து ஆய்வு செய்யுங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, கூவம் நதியை சீரமைக்க, 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், 529 ரூபாய் மாநில அரசுத் துறைகள் செலவிட்டுள்ளதாக தெரிவித்தார். கூவம் நதியை மீட்க தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியை வழங்க அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். கூவம் ஆற்றை நீர்வளத்துறை, ஆதாரத்துறையோடு இணைந்து 735 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மறுசீரமைக்கிறது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னை வந்த போது, கூவம் ஆற்றை அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு மறுசீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனிடையே சென்னையில் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை சீரமைப்பதற்காக , சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த அறக்கட்டளைக்கு 2015 -2016ம் ஆண்டு முதல் ரூ.1,479 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, தூர்வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை செய்துள்ளது., இந்த இரு ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த மக்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியமர்த்தி உள்ளது. மேலும் ஆறுகளில் கழிவுநீரைக் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக மற்றும் சுற்றுச்சுவர், வேலிகளை அடைப்பதற்காக நிதி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சிகளோ சென்னையில் நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இது நாள் வரையில் கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை இதனை வெளியிட வேண்டும் என்றும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.