சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1984-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்நடைபெற்றன. இந்த கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர், கமல்நாத், சஜ்ஜன் குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியது.
இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றம் சுமத்த போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவருக்கு எதிராக குற்றச்சாட்டைப் பதிவு செய்யுமாறும் டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
1984-ம் ஆண்டில் டெல்லியைச் சேர்ந்த பாதல் சிங், சர்தார் தாக்கூர் சிங், குர்பச்சன் சிங் ஆகியோர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் டைட்லர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார் என்றும், கலவரம் நடந்த இடத்துக்கு வந்த ஜெகதீஷ் டைட்லர் அங்கிருந்த வன்முறைக் கும்பலைத் தூண்டிவிட்டார் என்றும் சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.
சீக்கியருக்கு எதிரான கலவரத்தை விசாரித்த நானாவதி கமிஷனிலும் 80 வயதாகும் டைட்லரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த வழக்கு 2005-ல்மீண்டும் சிபிஐ-யால் விசாரிக்கத் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.