செங்கல்பட்டு பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் இன்று சனிக்கிழமை போலீசார் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், போதை மாத்திரைகள், காஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பிடிபட்ட மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்தது ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான செல்வமணி (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த நந்திவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வமணியை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சாவும் நான்கு பட்டா கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து செல்வமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக கூறி தனியார் விடுதியில் ஒரே சமயத்தில் ஆயிரம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.