ஆந்திராவில் பெய்த கனமழை பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாதிப்பிலிருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த தொடர் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக விஜயவாடாவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அதிகளவில் மழை பெய்து இருப்பதால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானாவுக்கு பிரதமர் உறுதி ” இதற்கிடையே மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக நேற்று மட்டும் சுமார் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 97 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. வெள்ளம் காரணமாக ரயில் நிலையங்களுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ராயண்ணபாடு, கொண்டப்பள்ளி, தெனாலி, விஜயவாடா, நிடுப்ரோலு மற்றும் பாபட்லா ரயில் நிலையங்களில் சிக்கி தவித்த 6,000 பயணிகளுக்கு காலை உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வெள்ளம் காரணமாக ராயனபாடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிக்கியிருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மட்டுமல்லாது ராயண்ணபாடிலிருந்து இருந்து விஜயவாடாவிற்கும், கொண்டப்பள்ளியிலிருந்து விஜயவாடாவிற்கும் 84 பேருந்துகள் ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பயணிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்புகளை பொறுத்தவரை தெலங்கானாவில் 15 பேரும், ஆந்திராவில் 12 பேரும் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இரு மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் நேற்று கேட்டறிந்தார். மேலும், பாதிப்புகளிலிருந்து மீண்டுவர மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.