ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்காவிட்டால் பெங்களூரில் இருந்து நீட்டிக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவளி வாட்டாளர் பக்சா கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னையை போல் கர்நாடகாவில் பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் என்பது தொடர்ந்து விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெங்களூர் – ஓசூர் ரோட்டில் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கும் பணி என்பது நடந்து வருகிறது. இந்த பணியை பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திட்டத்தை விரிவாக்கும் பணி என்பது நடந்து வருகிறது. இந்த பணியை பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் தமிழக – கர்நாடகா எல்லையில் உள்ள ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஓசூர் தமிழகத்தில் இருந்தாலும் கூட அங்கிருந்து ஏராளமானவர்கள் தினமும் பெங்களூர் சென்று வேலை செய்து வருகின்றனர். இதனால் மெட்ரோ ரயிலை ஓசூர் வரை விரிவாக்கம் செய்வது அவசியம் என்ற கோரிக்கை எழுந்தது.
பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம் சந்தாபுராவுக்கு பதில் தமிழக – கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளி வரை விரிவாக்கம் செய்ய கர்நாடகா அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அத்திப்பள்ளிக்கு அடுத்ததாக தமிழக பகுதிகளில் ஓசூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி வரை 23 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் – பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். மகேஷ்வர் ராவை பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி பொம்மச்சந்திரா – ஓசூர் இடையேயான மெட்ரோ பாதையில் தமிழ்நாட்டில் 11 கிலோமீட்டரும், கர்நாடகாவில் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் தமிழகம் – கர்நாடகா இடையேயான போக்குவரத்து இன்னும் மேம்படும். அதுமட்டுமின்றி ஓசூர் – பெங்களூர் சென்று வருவதற்கான பயண நேரம், பயண கட்டணம் என்பது கணிசமாக குறையும்.
இந்நிலையில் தான் ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட சலுவளி வாட்டாளர் பக்சா எனும் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 1ம் தேதி தமிழக – கர்நாடகா எல்லையில் போராட்டம் நடத்தினார். இதையடுத்து வாட்டாள் நாகராஜ் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தகயை சூழலில் தான் கைது நடவடிக்கைக்கு முன்பாக அவர் அளித்த பேட்டி தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று வாட்டாளர் நாகராஜ் மிரட்டி உள்ளார்.
இதுதொடர்பாக வாட்டாள் நாகராஜ், ‛‛ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஊட்டி, ஓசூரை தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. ஓசூரை இணைத்த பிறகு தான் மெட்ரோ ரயில் திட்டம் பெங்களூரில் இருந்து ஒசூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு அங்குலம் கூட நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் மாநில அரசு அணையை கட்ட நிதி ஒதுக்காவிட்டாலும் கூட மக்களை திரட்டி நாங்களே கட்டுமான பணியில் ஈடுபடுவோம்’’ என எச்சரித்துள்ளார்.
தமிழகத்தின் அங்கமாக உள்ள ஓசூர் மற்றும் ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் சொல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் அவர் இந்த கருத்தை கூறி வருகிறார். குறிப்பாக தமிழகத்துக்கு எதிராக தமிழக – கர்நாடகா எல்லையான அத்தப்பள்ளியில் போராட்டம் நடத்தும் போதெல்லாம் இந்த கருத்தை அவர் முன்வைக்க தவறுவது இல்லை. அந்த வகையில் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூர் வரை நீட்டிப்பு செய்யும் போராட்டத்திலும் வாட்டாள் நாகராஜ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.