‘மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்’ என அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் தான் சைக்கிள் ஓட்டிய வீடியோவைப் பகிந்து குறிப்பிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள சிகாகோ நகரில் மாலை வேளையில் கடற்கரையோரம் சைக்கிள் ஓட்டியபடி சென்ற காட்சிகளை தனது எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களத்தை அமைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். முதல்வரின் அந்த சைக்கிள் பயண வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா சென்றார்.தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த பிறகு, செப்.14-ம் தேதி அவர் தமிழகம் திரும்புவது போல பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயணத்தின் போது இதுவரை, முதல்வர் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து 30.8.2024 அன்று ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
31.8.2024 அன்று ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இந்த வரிசையில், “சென்னையில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஈட்டன் (Eaton) நிறுவனத்தின் ஆராய்ச்சி & மேம்பாடு (R&D) மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டேன். மேலும், இந்தியாவில் அஷ்யூரன்ட் நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையம், விரைவில் சென்னையில் அமையவுள்ளதையும் உறுதிசெய்தேன்.” என்று முதல்வர் அண்மையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.