மலையாள திரையுலில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் கேரளாவில் பரபரப்பை கிளப்பியுள்ளன. இந்நிலையில், நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் வரும் வழக்குகளை விசாரிக்க, பெண் நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் அமைக்க கேரள உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
மலையாள சினிமாக்கள் சமீப காலமாக தேசிய அளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது. ஆனால் இந்த சினிமா துறையில், நடிகைகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இதனை அறிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு தயார் செய்தது. ஆனால், இந்த அறிக்கை வெளியானால் எங்கு தங்களுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று பயந்த, திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், சமீபத்தில் நீதிமன்றம் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியானது. இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது.
கேரள மாநில அரசே இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தீவிர நடவடிக்கையை எடுக்க களத்தில் இறங்கியுள்ளது. இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளராக இருந்த சித்திக், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து சித்திக், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். மற்றொரு நடிகரான ரியாஸ் கான் மீதும் ரேவதி குற்றம்சாட்டியிருக்கிறார். ரேவதியை தொடர்ந்து, பெங்காலி நடிகை ஒருவர், கலாச்சித்ரா அகாதெமியின் தலைவரும், பிரபல மலையாள சினிமா இயக்குநருமான ரஞ்சித் மீது பாலியல் புகாரை எழுப்பினார். இதனை தொடர்ந்து ரஞ்சித் தான் வகித்த பதவியை ராஜினாமா செய்தார். இப்படியாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு குவிந்து வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த கேரள அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
சமீபத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தன்னை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று, அங்கு வைத்து தவறாக நடந்து கொண்டதாக ஒரு புகாரை இளம் பெண் ஒருவர் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது, மலையாள நடிகர் அலன்சியர் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இளம்பெண் ஒருவர், செங்கமநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இப்படியாக தொடர் புகார்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் வரும் வழக்குகளை விசாரிக்க, பெண் நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் அமைக்க கேரள உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.