ஆளுநர் ரவியின் பேச்சுகளை புறக்கணிப்பதே நாம் செய்யக்கூடியது: ஆ.ராசா!

தமிழக பள்ளி கல்வியை விமர்சித்த ஆளுநர் ரவிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருப்பதாக அண்மையில் விமர்சித்திருந்தார். அதற்கு திமுக தரப்பில் கடுமையாக எதிர்வினைகள் ஆற்றப்பட்டன. இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார். துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக் கூட படிக்க முடியவில்லை. ஒரு ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது” என்றார்.

இந்நிலையில், ஆளுநரின் பேச்சு குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த திமுக எம்.பி ஆ.ராசா கூறியதாவது:-

அவரது கல்வித்தரம் என்ன? 1967க்குப் பிறகு தொடர்ந்து தமிழ்நாட்டில் கல்வி பெற்றோர் விகிதம் அதிகரித்து வருவதற்கு ஆவணங்களே சான்று. ஆவணங்களைப் பரிசீலிக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு அவ்வப்போது கொடுக்கும் கோமாளித்தனமான வாக்குமூலங்களை ஏன் சீரியஸாக எடுத்துக் கொள்கிறீர்கள்? ஆளுநரின் பேச்சு ஏதாவது நாளிதழில் வந்தால் இப்போதெல்லாம் படிப்பதே இல்லை. ஏதோ ஒரு கோமாளியின் பேச்சு என கடந்து சென்றுவிடுகிறேன். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ரவியின் பேச்சுகளை புறக்கணிப்பதே நாம் செய்யக்கூடியது. புரியாமல் பேசினால் அதற்கு பதில் சொல்லலாம். புரிந்தே முட்டாள்தனமாக அரசியல் செய்தால் என்ன செய்ய? அரசியல் சட்டத்தால் சொல்லப்பட்டிருக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் சிறிய மனிதர் அவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.