மதுரை புத்தகத் திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிக்கப்பட்டது: அமைச்சர் மூர்த்தி!

மதுரை புத்தகத் திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிக்கப்பட்டது என்றும், இதில் மதச் சாயமோ, சாதி சாயமோ பூசவேண்டாம் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைந்துள்ள மாநாட்டு மைய வளாகத்திற்குள் நேற்று துவங்கிய புத்தகத் திருவிழா செப்டம்பர் 16ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், சுமார் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நேற்று துவக்க விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர மேயர் இந்திராணி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர்களும், பிரமுகர்களும் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்துச் சென்ற பின், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரி, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் நாட்டுப்புற பக்தி பாடல் ஒன்றுக்கு மேடை நடனக் கலைஞர்கள் கருப்பசாமி வேடமிட்டு ஆடிக் கொண்டிருந்தனர். மேலும், அந்த வேடத்தோடு மேடையை விட்டு கீழே இறங்கி வந்து நடனக் கலைஞர்கள் ஆடத் தொடங்கினர். அப்போது பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் சிலர் சாமி அருள் வந்து ஆடத் தொடங்கினர். அதனால், அருகில் இருந்த சக மாணவியர் மாணவிகளை கட்டுப்படுத்த முயன்றனர். இந்நிலையில் பல மாணவிகள் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். இதனால், புத்தகத் திருவிழா நடைபெறும் அரங்கத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. புத்தக திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமி ஆடிய காணொளி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பொதுமக்கள் விழா ஏற்பாட்டாளர்களைக் குற்றம் சாட்டினர். அரசு நிகழ்ச்சிகளில் இதுபோன்று மதம் சார்ந்த பாடல்களை அனுமதிப்பதும், ஊக்குவிப்பதும் மிகத் தவறான போக்கு என நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, “மதுரை புத்தகத் திருவிழாவில் தினமும் 2 மணி நேரம் கலை நிகழ்ச்சி நடைபெறும் என சொன்னார்கள். நேற்று கலை நிகழ்ச்சியில் பயன்படுத்தியது கிராமிய பாடல்கள் மட்டுமே ஒழிய, மதப் பாடலோ, சமுதாயப் பாடலோ இல்லை. மதுரை அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஊர். சமத்துவம், சகோதரத்துவத்தை வளர்க்கக்கூடிய இடம் மதுரை. திமுக ஆட்சி என்பது எல்லா தரப்பு மக்களுக்குமான ஆட்சி. புத்தகத் திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிக்கப்பட்டது. இதில் மத சாயமோ, சாதி சாயமோ பூச வேண்டாம், தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என கூறினார்.