சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூவரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சக நீதிபதிகளான ஜெ. சஞ்ஜிவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதேபோல மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி வரும் எம்.ஜோதிராமன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வரும் ஆர். பூர்ணிமா மற்றும் சென்னை தொழிலக தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் ஏ.டி.மரியா கிளேட் ஆகிய மூவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்,சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.