5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்கள் இலக்கு: அமித் ஷா!

“இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், 5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற இந்திய சைபர் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) முதலாவது அமைப்பு தினக் கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். சைபர் மோசடி தணிப்பு மையத்தை (சி.எஃப்.எம்.சி) நாட்டுக்கு அர்ப்பணித்த உள்துறை அமைச்சர், கூட்டு சைபர் குற்ற விசாரணை அமைப்பை தொடங்கி வைத்தார். ‘சைபர் கமாண்டோக்கள்’ திட்டத்தையும், சந்தேகத்திற்குரியோர் பதிவேட்டையும் அமித் ஷா தொடங்கி வைத்தார். ஐ4சி-யின் புதிய சின்னம், தொலைநோக்குப் பார்வை மற்றும் இலக்கையும் அமைச்சர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி முன்முயற்சியால் ‘பாதுகாப்பான இணைய வெளி’ இயக்கத்தின் கீழ் 2015-ம் ஆண்டு ஐ4சி நிறுவப்பட்டது. தற்போது இது, இணைய பாதுகாப்புக்கு இந்தியாவின் வலுவான தூணாக மாறுவதை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு பயணத்தில், இந்த யோசனை ஒரு முன்முயற்சியாக மாறி, பின்னர் ஒரு நிறுவனமானது. இப்போது இது சைபர் பாதுகாப்பான இந்தியாவின் மிகப் பெரிய தூணாக மாறுவதை நோக்கி நகர்ந்து வருகிறது.

அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல அச்சுறுத்தல்களை உருவாக்கி வருகிறது. அதனால்தான் இணைய பாதுகாப்பு என்பது டிஜிட்டல் உலகத்துடன் மட்டுப்படுத்தப்படாமல், தேசிய பாதுகாப்பின் முக்கிய அம்சமாகவும் மாறியுள்ளது. ஐ4சியின் நான்கு முக்கிய இணைய தளங்களும் இன்று இங்கு தொடங்கப்பட்டுள்ளன. சைபர் மோசடி தடுப்பு மையம், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன், சைபர் கமாண்டோ, சமன்வே தளம், சந்தேகத்திற்குரியோர் பதிவேடு ஆகியவையும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதில், ‘சைபர் கமாண்டோ’ திட்டத்தைப் பொறுத்தவரையில், 5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி சைபர் சந்தேக பதிவேட்டை வைத்திருப்பது எந்த நோக்கத்திற்கும் உதவாது. ஏனெனில் மாநிலங்களுக்கு அவற்றின் சொந்த எல்லைகள் உள்ளன. ஆனால் சைபர் குற்றவாளிகளுக்கு எல்லைகள் இல்லை. சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு பொதுவான தளத்தை உருவாக்க தேசிய அளவில் சந்தேகத்திற்குரியோர் பதிவேட்டை உருவாக்குவதும், மாநிலங்களை அதனுடன் இணைப்பதும் காலத்தின் தேவை. இந்த முயற்சி வரும் நாட்களில் சைபர் குற்றங்களைத் தடுக்க பெரிதும் உதவும்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தையும் இன்று முதல் ஐ4சி தொடங்க உள்ளது. 72-க்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகள், 190-க்கும் அதிகமான வானொலி பண்பலை அலைவரிசைகள், திரையரங்குகள் மற்றும் நாட்டில் உள்ள பல மேடைகள் மூலம் இந்தப் பிரச்சாரத்தை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சைபர் குற்றங்களை தவிர்ப்பது எவ்வாறு என்பது பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாவிட்டால் இந்தப் பிரச்சாரம் வெற்றிகரமாக இருக்காது. சைபர் குற்ற உதவிஎண் 1930 மற்றும் ஐ4சியின் பிற தளங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் பயன்பாட்டை அதிகரித்து, சைபர் குற்றங்களைத் தடுக்க உதவும். இந்தப் பிரச்சாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் இணைந்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் விழிப்புணர்வை பரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.