விசிகவின் மதுவிலக்கு மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ளது. இதில்; பூரண மதுவிலக்கில் உடன்பாடு உள்ள அதிமுக உட்பட அரசியல் கட்சியினர் யாரும் விசிகவின் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-
மதுவிலக்கு குறித்து துறைரீதியாக ஆலோசித்த பிறகே கருத்து கூற இயலும். மக்களிடம் தங்கள் கட்சியின் கோரிக்கையை கொண்டு செல்வதற்காக விசிக மாநாடு நடத்துகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டால் அரசுக்கு பின்னடைவு அல்ல. மது விற்பனையை இந்த அரசு தொடங்கி அதற்காக மாநாடு நடந்தால்தான் பின்னடைவு. எந்த கட்சி வேண்டுமானாலும் கோரிக்கையை வைக்க மாநாடு நடத்தலாம்; அவை திமுகவை எதிர்ப்பதற்கு அல்ல. கோரிக்கைக்காக மாநாட்டை நடத்தினால் அரசியலுடன் தொடர்புபடுத்தி கூறுவது தவறு. விசிகவின் மதுவிலக்கு மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.