சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
வட இந்திய மாநிலங்களில்தான் விநாயக சதுர்த்தி (கணபதி பூஜை) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பொதுவாக 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடைபெறும். கடந்த சனிக்கிழமை முதல் கணபதி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் டெல்லி வீட்டில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜை செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டு நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அந்தவகையில் சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்தி எங்கும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி வேறு யாருடைய வீட்டுக்கும் சென்றாரா? என்று தகவல் இல்லை. ஆனால் தலைமை நீதிபதி வீட்டுக்கு சென்றிருக்கிறார். அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்கள் இப்படி அரசியல் தலைவர்களை சந்திப்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்’ என தெரிவித்தார். மேலும் பல்வேறு கட்சித்தலைவர்களும் தலைமை நீதிபதி வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றதை கடுமையாக விமர்சித்து உள்ளனர். இதைப்போல மூத்த வக்கீல்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மூத்த வழக்கறிஞரும், சுப்ரீம்கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவருமான கபில்சிபல் கூறுகையில், ‘உயர் பதவியில் இருப்பவர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சியை இப்படி விளம்பரப்படுத்தக்கூடாது. இதுபோன்ற ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் தனது ஆர்வத்தை ஒருபோதும் காட்டக்கூடாது. தலைமை நீதிபதி வீட்டிற்கு செல்வது பற்றி மோடி ஆலோசனை செய்து, இது தவறான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என்று அவரிடம் கூறியிருக்க வேண்டும்’ என்றார்.
மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் தனது எக்ஸ் தளத்தில், ‘சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் சுதந்திரம் மீதான அனைத்து நம்பிக்கையும் தகர்ந்து விட்டன. நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப் பிரிவினையில் சமரசம் செய்துகொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என அறிவுறுத்தி உள்ளார்.
மற்றொரு மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் தனது எக்ஸ் தளத்தில், ‘சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் மோடியை தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்தது அதிர்ச்சியை அளிக்கிறது. நிர்வாகத்திடமிருந்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் அரசியலமைப்பின் வரம்புக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு இது மிகவும் மோசமான சிக்னலை அனுப்புகிறது’ என குறிப்பிட்டு இருந்தார்.
அதேநேரம் எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறுகையில், ‘புலம்பல் தொடங்கி விட்டது. நாகரிகம், நல்லுறவு, ஒற்றுமை இவை அனைத்தும் இந்த இடது தாராளவாதிகளுக்கு வெறுப்பாக இருக்கிறது. பிரதமர் பங்கேற்றது ஒரு சமூக நிகழ்வு அல்ல, மாறாக புனிதமான கணபதி பூஜைதான்’ என சாடியுள்ளார்.
இதைப்போல ஷிண்டே பிரிவு சிவசேனா எம்.பி. மிலிந்த் தியோரா தனது எக்ஸ் தளத்தில், ‘தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை புகழ்வார்கள், இல்லையென்றால் நீதித்துறை சமரசத்துக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம் சாட்டுவார்கள். தலைமை நீதிபதி வீட்டுக்கு பிரதமர் சென்றது குறித்த பொறுப்பற்ற கருத்துகள் துரதிர்ஷ்டவசமானது’ என குறிப்பிட்டு உள்ளார்.