கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் காவல்துறை ஆமை வேகத்தில் விசாரணை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் என்.சி.சி பயிற்சி முகாம் நடந்தது. இதில் 13 வயது மாணவி ஒருவர், போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து அந்த போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், உதவி பயிற்சியாளர்கள், பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிவராமனின் தந்தையும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் மற்றும் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் தனது விசாரணையை சரியாக செய்துள்ளதாக தெரிவித்தனர். அதன் அறிக்கையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, உயிரிழந்த முதல் குற்றவாளி சிவராமனுக்கு எலி மருந்து எப்படி கிடைத்தது? யாரிடம் இருந்து வாங்கினார்? என காவல்துறை ஏன் இன்னும் விசாரணை செய்யவில்லை? காவல்துறை விசாரணை சரியாக முறையில் நடத்தப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு காவல்துறை இந்த வழக்கை விசாரணை செய்யும் என தெரியவில்லை. ஆமை வேகத்தில் விசாரணை நடைபெறுகிறது. என்.சி.சி ஆசிரியர் மற்றும் சிவராமனுக்கும் என்ன தொடர்பு? சிவராமனால் ஆசிரியருக்கு என்ன லாபம்? எந்த அடிப்படையில் என்.சி.சி முகாம் நடத்த தனியார் பள்ளியில் அனுமதி வழங்கப்பட்டது? என சரமாரியாக கேள்வி எழுப்பி, இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.