அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி கண்டனம்!

ஜிஎஸ்டி குறித்து, மத்திய நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்தது கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், அடுத்த நாளே சீனிவாசன் நிதியமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஒரு மாதிரியான ஜிஎஸ்டி குறித்து வலியுறுத்தியிருந்தார். அவர் பேசியதாவது:-

உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள வானதி சீனிவாசன் எம்எல்ஏ எங்களுடைய ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க. ஸ்வீட்டுக்கு ஐந்து சதவீதம், உணவுக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் உள்ள வைக்குற கீரீம்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கிறது. அவங்க வரும்போதெல்லாம் ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி, காரம் சாப்பிடுவது, காரத்துக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என தினசரி நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி கொடுப்பது கஷ்டமாக உள்ளது. பண்ணுக்கு ஜிஎஸ்டி கிடையாது, அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி என்பதை பார்க்கும் வாடிக்கையாளர்கள், பன்னை கொண்டா.. அதில் கிரீமை நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள். கடை நடத்த முடியவில்லை மேடம். இனிப்புக்கு குறைவாக ஜிஎஸ்டியும், காரத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை, ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஏற்கெனவே ஜிஎஸ்டி குறித்து, சிறுகுறு மற்றும் நடுத்தர வணிகர்களிடையே பல்வேறு சலசலப்புகள் இருந்து வந்திருந்தது. இப்படி இருக்கையில், சீனிவாசனின் இந்த பேச்சு மொத்த வணிகர்களின் மனவேதனையையும் கொட்டி தீர்த்ததை போல இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே சீனிவானின் பேச்சுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. சோஷியல் மீடியாக்களில் இவரது பேச்சு பரவலாக ஷேர் செய்யப்பட்டது. ஆனால் மறுநாள், அதாவது செப். 12ம் தேதி சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும், “கேள்வி கேட்டால் மன்னிப்பு கேட்க சொல்வீர்களா?” என்று கொந்தளித்தனர்.

குறிப்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது. வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அருவருப்பானதும் கூட. அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்புக்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும்.அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும். சீனிவாசன் அவர்களுக்கு எனது அன்பும், ஆதரவும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியும் இந்த விவகாரம் குறித்து பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். “கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையைக் கேட்கும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடன் மற்றும் முற்றிலும் அவமரியாதையுடன் எதிர்க்கப்படுகிறது. ஆனால், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களை சுருட்ட முற்படும்போது, மோடி ஜி சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார். பணமதிப்பு நீக்கம், வரி கொள்ளை மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இதை எதிர்த்து கேள்வி கேட்டு, அது அதிகாரத்தில் இருப்பவர்களின் ஈகோவை தொடும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. MSMEகள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றன. ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.