இத்துடன் பிரச்னையை முடிக்க விரும்புகிறோம்: அன்னபூர்ணா நிறுவனம்!

அன்னபூர்ணா நிறுவனர் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரை சந்தித்ததாகவும் இந்த பிரச்னையை முடிக்க விரும்புவதாகவும் அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அன்னபூர்ணா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த செப். 11 ஆம் தேதி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனரும் தமிழ்நாடு உணவக சங்கத்தின் தலைவருமான சீனிவாசன் கலந்துகொண்டார். உணவகங்களிலும் பேக்கரிகளிலும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விகித மாறுபாடு இருப்பது குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. அவர் பேசியது தவறாக எதுவும் புரிந்துகொள்ளப்படக் கூடாது என்பதற்காக தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரை சந்தித்துப் பேசினார். ஆனால், இந்த விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தவறான புரிதல்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

தமிழக பாஜக இதற்கு மன்னிப்பு தெரிவித்ததுடன் விடியோவை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து எங்கள் கருத்துகளை தெரிவிக்கச் செய்ததற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி.

தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு இத்துடன் ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த பிரச்னையை முடித்து அடுத்த பணியை தொடர விரும்புவதை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த வாடிக்கையாளர்கள், மக்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.