என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார்: அரவிந்த் கேஜ்ரிவால்!

தன்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் நீதிமன்றம்’ (‘ஜன்தா கி அதலாட்’) நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:-

கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மின்சாரம் மற்றும் தண்ணீரை நாங்கள் இலவசமாக்கினோம். மக்களுக்கான சிகிச்சையை இலவசமாக்கினோம், சிறந்த கல்வியை வழங்கினோம். மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றால், எங்களின் நேர்மையின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று நினைக்கத் தொடங்கினார் பிரதமர் மோடி. அதற்காக கேஜ்ரிவால், சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் நேர்மையற்றவர்கள் என்று நிரூபித்து அவர்களைச் சிறையில் அடைக்க சதித்திட்டம் தீட்டினார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களால் காயமடைந்ததால் நான் பதவியை ராஜினாமா செய்தேன். இங்கு மரியாதையை மட்டும்தான் நான் சம்பாதித்தேன்; பணத்தை அல்ல. ஊழலில் ஈடுபடவோ, முதல்வர் நாற்காலியில் அமர்வதற்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுகளால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை ஒரு தலைவராக நான் சொல்லிக்கொண்டது இல்லை. இன்னும் சில நாட்களில் நான் முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேறி விடுவேன். எனக்கென ஒரு வீடுகூட இல்லை. இந்த பத்தாண்டுகளில் நான் அன்பை மட்டும் தான் சம்பாத்தித்துள்ளேன். அதனால் தான் பலர் தங்களின் வீடுகளை எடுத்துக்கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். நவராத்திரி தொடங்கியதும் முதல்வர் வீட்டில் இருந்து வெளியேறி உங்களில் ஒருவனாக வாழப்போகிறேன்.” என்றார்.

ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ஐந்து கேள்விகள்: கூட்டதில் பேசியபோது ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத்-க்கு, ஐந்து கேள்விகளை முன்வைத்தார்.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம், மற்ற கட்சிகளை உடைப்பது, அரசாங்கங்களைக் கவிழ்ப்பது ஆகிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஊழல் தலைவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியால் விமர்சிக்கப்பட்ட பலர், பாஜகவில் சேர்ந்துள்ளார்கள். இத்தகைய அரசியலை நீங்கள் ஏற்கிறீர்களா? பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைவரான நீங்கள், தவறான செயல்களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா? வயது வரம்பு விஷயத்தை கருத்தில் கொண்டு, எல்.கே. அத்வானிக்கு ஓய்வு கொடுத்ததைப் போல் நரேந்திர மோடிக்கும் ஓய்வு கொடுக்கப்படுமா? பாஜகவின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தற்போது கட்சிக்கு தேவையில்லை என்று கூறியபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? என்று கேட்டுள்ளார்.