லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் 50 குழந்தைகள், 94 பெண்கள் உள்பட 558 பேர் உயிரிழந்தனர். 1,835 பேர் காயமடைந்துள்ளனர். இதனை லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு மோதல் நீடித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் 50 குழந்தைகள் உள்பட 558 பேர் உயிரிழந்தனர். 1835 பேர் காயமடைந்துள்ளனர்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான அறிக்கையில் லெபனான் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், “இஸ்ரேல் மோதல் இலக்குகளை விஸ்தரிப்பது, காசா மக்களுக்கு எதிராக தான் நடத்தும் அழித்தொழிக்கும் போரின் மீதிருந்து சர்வதேச கவனத்தைத் திருப்பும் செயல். காசாவில் பள்ளிகளிலும், பாதுகாப்பான பகுதிகளாக அறிவிக்கப்பட்ட தங்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கே உள்ள எம்மக்களை தனிமைப்படுத்தி மிகப்பெரிய குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஏற்கெனவே இஸ்ரேல் காசா மீது கடந்த அக்டோபர் தொடங்கி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்நிலையில், தற்போது சுதந்திரமான பாலஸ்தீன மண்ணுக்கு ஆதரவாக இயங்கும் ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லாக்களை எதிர்த்து தற்போது லெபனான் மீதும் தாக்குதலை வலுப்படுத்தி வருகிறது இஸ்ரேல். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் அச்சத்தைக் கடத்தியுள்ளது.
இதேபோல் ரஷ்யாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் தனது தாக்குதல் இலக்குகளை விரிவுபடுத்துவது மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதையுமே போர் பதற்றத்துக்குள் ஆழ்த்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தால், அப்பகுதியில் ஏற்கெனவே இருக்கும் அமெரிக்கப் படைகளை அதிகரிக்கும் வகையில் சிறிய எண்ணிக்கையிலான கூடுதல் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகமானது லெபனான் தாக்குதலை கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிகக் கொடூர வன்முறை என்று விமர்சித்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தசானி ஓர் அறிக்கையில், “சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தெளிவாக இருக்கிறது. ஆயுத மோதலில் ஈடுபடும் அனைத்துத் தரப்பினரும் பொதுமக்கள், போராளிகள் யார் என்பதை தெளிவாகப் பகுப்பாய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணர்த்துகிறது. பொது மக்கள், அவர்களின் உடைமைகளை தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி அப்பாவிகள் கொல்லப்படுவது, காயப்படுவது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தெற்கு, கிழக்கு லெபனானில் தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளதால் அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியெறி வருகின்றனர். இது குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர், தெற்கு லெபனானில் இருந்து மக்கள் வெளியேறும் இடத்தில் நான் இருந்தேன். என் கண்கூடாக மக்கள் கார்களில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பெய்ரூட் நோக்கிப் புறப்படுவதைக் கண்டேன். கூச்சலும், குழப்பமுமான காட்சிகள் அவை. மக்கள் பீதியில் உள்ளனர். நெடுஞ்சாலைகளில் கூட வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அங்கிருந்த சில மக்களிடம் பேசினோம். ‘நாங்கள் இடம்பெயர்ந்து செல்கிறோம். ஆனால் இது எவ்வளவு தூரம் தொடரும் எனத் தெரியவில்லை’ என்றனர். போர்க்களங்களில் இடம்பெயர்தல் ஒரு புதிய ஆயுதமாகிவிட்டது. அப்பாவி மக்களை இங்கே செல்லுங்கள், அங்கே செல்லுங்கள் நிர்பந்திப்பதும் போர் உத்தி. இஸ்ரேல் வடக்குப் பகுதி மீது லெபனான் தாக்குதல் ஓயும்வரை உங்கள் மக்கள் தெற்கு லெபனானில் உள்ள தங்கள் வீட்டுக்குச் செல்ல முடியாது என்று ஹிஸ்புல்லாக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருக்கிறது” என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த இரு நாள்களில் மட்டும் 558 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், கிழக்கு – மேற்கு நாடுகளின் பயண முனையமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் லெபனான் நாட்டிற்குச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளது. அமீரகத்தின் நீண்ட பயண நேரம் கொண்ட எதிஹாத், ஃபிளைதுபை ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று எகிப்து நாட்டின் ஃபிளாக்ஷிப் நிறுவன விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எகிப்து தலைநகர் கைரோவிலிருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு நாள்தோறும் இரு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. அவை இனி தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விமான போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போர் பதற்றத்தின் காரணமாக இஸ்ரேலுக்குச் செல்லும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஸ்பெயின் நாட்டின் இபிரியா, அஜர்பைஜான் உள்ளிட்ட ஏர்லைன்ஸ்களும் இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.