விவசாய சட்டங்கள் பற்றிய எனது கருத்துகள் தனிப்பட்டவை: கங்கனா

விவசாய சட்டங்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவை தனது தனிப்பட்ட கருத்துகளே என்றும் கட்சியின் நிலைப்பாட்டுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாயச சட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கூறி மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இந்தநிலையில், அவரது கருத்துக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று செவ்வாயக்கிழமை கூறிய பாஜக, கட்சி சார்பாக அத்தகைய கருத்துகளைத் தெரிவிக்க அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் கண்டித்திருந்தது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா வெளியிட்டிருந்த ஒரு வீடியோ செய்தியில், “கங்கனா ரனாவத் கூறிய கருத்துகள் அவரின் தனிப்பட்ட அறிக்கை. விவசாய சட்டங்கள் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது கருத்துகள் குறித்து விளக்கம் அளித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிச்சயமாக விவசாய சட்டங்கள் குறித்த எனது கருத்துக்கள் தனிப்பட்டவையே. அவை குறித்த கட்சியின் நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகையும், பாஜக எம்.பியுமான ரனாவத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “எனது இந்தக் கருத்து நிச்சயம் சர்ச்சையாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மூன்று விவசாய சட்டங்களும் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். விவசாயிகளே அதற்கான கோரிக்கைகளை எழுப்ப வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளே முக்கியத் தூண்கள். அவர்களுக்கு நன்மை பயக்கும் விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டுவர அவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்தக்கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தான் கூறிய கருத்துகளுக்காக கங்கனா ரனாவத் கட்சியால் கண்டிக்கப்படுவது இது முதல் முறை இல்லை. விவசாயிகள் போராட்டம் பற்றி கடந்த மாதம் கங்கனா கூறிய கருத்துகளுக்காக பாஜக அவரைக் கண்டித்திருந்தது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை கூறும்போது நிதானத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.