ஆளுநர் ஆர்.என்.ரவியை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்: மதிமுக!

ஆளுநர் ஆர்.என்.ரவியை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன ராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தில் இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், ஏனெனில் இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது ஆகும் எனவும் குறிப்பிட்டதோடு, நடைமுறை சாத்தியமற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இலங்கை அதிபராக புதிதாக பொறுப்பேற்று உள்ள அனுரா குமார திசநாயகருக்கு கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களை மீட்கவும், இலங்கை நீதிமன்றம் மீனவர்கள் மீது விதித்துள்ள அபராதம், சிறை தண்டனை போன்றவற்றை ரத்து செய்யவும் அறிவுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க இந்திய அரசு தேவையான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒன்றிய அரசு உடனடியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளை தொடங்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமுடன் செயல் படும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில், “கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நடைபெற்ற இந்து தர்ம வித்யா பீடத்தின் பட்ட மளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.இரவி, இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை என்று பேசி உள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் மதச்சார்பின்மை என்கிற சொற்றொடர் அவசர நிலைக் காலத்தின் போது சேர்க்கப்பட்ட போதும் மொத்த அரசமைப்புச் சட்டமும், மதச் சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் என்ற அடித்தளத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பட்டறையில் உருவான ஆளுநர் ஆர்.என்.இரவி. மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக் கூறி வருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.இரவி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் தொடுத்துள் ளார். அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியேற்றுள்ள அவர் ஆளுநர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர், உடனடியாக அவரை குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்றும் மதிமுக வலியுறுத்தியுள்ளது.