உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார்.
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வேறு சில குற்றச்சாட்டுகளுக்கென வழக்குகள் பதிவு செய்தனர். தொடர்ந்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், சவுக்கு சங்கர் கஞ்சா வைத்து இருந்ததாக பதிந்த வழக்குடன், மேலும் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 2-வது முறையாக சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் தேனி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை எதிர்த்து அவரது தாயார், உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது, தமிழக அரசு, ‘சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை மறுபரிசீலனை செய்த அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்’ என அரசு தரப்பில் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை ஜாமீனில் விடுதலை செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை முடித்து வைத்தனர். இதற்கிடையில், மதுரை மத்திய சிறையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறைக்கு வெளியே சங்கரை அவரது வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர் கூறியதாவது:-
இருமுறை முறை குண்டர் சட்டத்தில் என்னை கைது செய்தனர். முதல்வர் ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் இல்லை. விமர்சனங்களை பார்த்து வளர்ந்தவர் இல்லை. தந்தையின் நிழலில் வளர்ந்த போன்சாய் செடி. பணியிலிருப்பவர் இறந்தால் கருணை அடிப்படையில் எப்படி வேலை கொடுப்பார்களோ, அதேபோல் கருணை அடிப்படையிலேயே அவருக்கு திமுக தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
உண்மைகளை பேசியதால் சவுக்கு மீடியா முடக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டில் நடக்கும் உண்மைகள் வெளியே வரக்கூடாது என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி கவனமாக உள்ளனர். ஆனால், நான் எப்போதும் உண்மையை பேச பயப்பட போவதில்லை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளன. மெத்தனால் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் உள்துறைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்காது. இதுபோன்ற பல உண்மைகள் மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
முன்பு இருந்தது போல அதே வீரியத்துடன் தொடர்ந்து செயல்பட்டு மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்வேன். சில காலங்களுக்குப் பிறகு சவுக்கு மீடியா மீண்டும் இயங்கத் தொடங்கும். கோவை சிறையில் எனது கை உடைக்கப்பட்டது. மற்ற சிறைகளில் என்னை வழக்கமான கைதி போலவே நடத்தினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.