தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஆனால், ஏமாற்றம் பொதுமக்களுக்கு தான் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை, புலியகுளம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று கலந்து கொண்டு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக அளவில் பெண்கள் சேர்ந்து இருப்பது மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. எதிர்வரும் நாட்களில் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெறும். மத்திய, மாநில அரசு இணைந்து தான் ஜிஎஸ்டி குறித்த முடிவுகளை எடுக்கின்றனர். தமிழக நிதி அமைச்சர் சந்தித்துள்ளேன்.
விவசாயம் மற்றும் கோவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சந்திக்க உள்ளேன். ரேஷன் அட்டைகளில் போலியாக நபர்கள் சேர்க்கப்படுவது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அது ஏழைகளுக்காக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. என்கவுன்டர் செய்தால் பொதுமக்களை சமாதானம் செய்ய முடியும் என திமுக அரசு நினைக்கிறது.
2019-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடியை காங்கிரஸ் குறை கூறி வருகிறது. ஆனால் தமிழக மக்கள் மீது நலன் இல்லாமல் மத்திய அரசை மட்டுமே குறைக்கூறி வருகின்றனர். தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம், ஆனால் ஏமாற்றம் பொதுமக்களுக்கு தான் இருக்கும். மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநில அரசு திருப்பி அனுப்புகிறது. ஆனால் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று தொடர்ச்சியாக திமுக அரசு கோரிக்கை வைத்து வருகிறது. நொய்யல் ஆற்றில் நேரடியாக மனித கழிவுகள் கலக்கிறது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.