ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அவரின் பேச்சு ‘பாசாங்குதனத்தின் மோசமான நிலை’ என்று சாடியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வில் நடந்த பொது விவாதத்தின் போது வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசியதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஐநா பொதுச் சபையில் இந்தியாவின் பிரதிநிதி பவிகா கூறியதாவது:-
வருந்தத்தக்க வகையில் இந்தச் சபை ஒரு கேலிக்கூத்தான விஷயத்தைக் கண்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் இந்தியா பற்றிய பேச்சைப் பற்றிதான் நான் குறிப்பிடுகிறேன். பாகிஸ்தான் அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டி பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்பது உலகம் அறிந்தது. அது எங்களின் நாடாளுமன்றத்தைத் தாக்கியது. எங்களின் நிதித்தலைமையகம், மும்பை, சந்தைப் பகுதிகள் மற்றும் புனிதயாத்திரை பாதைகளைத் தாக்கியது. இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. இத்தகைய ஒருநாடு எல்லா இடங்களிலும் பயங்கரவாதம் பற்றிப் பேசுவது பாசங்குத்தனத்தின் மோசமான நிலையேயாகும். மோசமான தேர்தல் வரலாறுகளைக் கொண்ட ஒரு நாடு ஜனநாயகத்தின் அரசியல் தேர்வுகளைப் பற்றிப் பேசுவது மிகவும் அசாதாரணமானது.
உண்மையில் நிஜம் என்னவென்றால் பாகிஸ்தான் எங்களின் பகுதியை ஆக்கிரமிக்க விரும்புகிறது. இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாத, அதன் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீரின் தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதத்தை பயன்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதம் தவிர்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எங்களின் அண்டை நாடு புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 1971-ல் இனப்படுகொலை செய்து, இடைவிடாமல் தொடர்ந்து சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்திய ஒரு தேசம் தற்போது, சகிப்பின்மை மற்றும் பயம் பற்றிப் பேசுவது கேலிக்குரியது. உண்மையில் பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக ஒசாமா பின்லேடனுடன் தொடர்பில் இருந்த ஒரு நாட்டைப் பற்றிப் பேசுகிறோம். உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களில் தங்களின் தடம் உள்ள ஒரு நாடு. இவ்வாறு இந்தியாவின் பிரதிநிதி பேசினார்.
முன்னதாக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஜம்மு காஷ்மீரை பாலஸ்தீனத்துடன் ஒப்பிட்டு, அங்குள்ள மக்கள் தங்களின் சுதந்திரம், சுய உரிமைகளுக்காக ஒரு நூற்றாண்டு காலமாக போராடி வருகின்றனர் என்றார்.
மேலும் இந்தியா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சிறப்புப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படியும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் படியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
’ஆசாத் காஷ்மீர்’ என்று பாகிஸ்தானால் அழைக்கப்படும் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் எல்லை தாண்டுவோம் என்று இந்தியத் தலைமை அச்சுறுத்தியது என்றும் குற்றம்சாட்டினார்.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த தனது பேச்சில் பாகிஸ்தான் பிரதமர், தங்கள் நாட்டுக்கு எதிராக இந்தியா தனது ராணுவ பலத்தை விரிவுபத்துவதாக குற்றம்சாட்டினார். உலக நாடுகளில் அதிகரித்து வரும் இஸ்லாமியர் எதிர்ப்புகள் பற்றியும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை பற்றியும் கவலை தெரிவித்தார்.