தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்து வருகிறது. அதே சமயம் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை காவல் துறை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல ரவுடிகள் காவல் துறையின் என்கவுண்டர்களுக்கு இரையாகி உள்ளனர். நேற்று கூட கண்டெய்னரில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த பணத்துடன் தப்ப முயன்ற ஹரியானா மாநில கொள்ளையனை நாமக்கல்லில் காவல் துறையினர் என்கவுண்டர் செய்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல் துறையினர் கையில் துப்பாக்கியை எடுத்து யாரை வேண்டுமானாலும் சுடுகின்ற நிலைதான் உள்ளது. ரவுடிகளை டப் டப் என சுடுவதற்கு அது என்ன தீபாவளி துப்பாக்கியா? நீதித் துறையும் சட்டமும் எதற்காக உள்ளது? குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். ஆனால், சட்டம் ஒழுங்கை கெடுத்துவிட்டு ஒருவரை துப்பாக்கி வைத்து என்கவுண்டர் செய்துவிட்டால் சட்டம் – ஒழுங்கு சரியாகிவிடும் என்கிற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். துப்பாக்கியைக் கொண்டு சட்டம் – ஒழுங்கை வழிக்கு கொண்டு வந்துவிட முடியாது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கருணாநிதி, மு.க.ஸ்டாலின் பதவி இருந்தனர், இப்போது உதயநிதி வருகிறார். வாரிசுகள் தான் வந்துகொண்டு இருக்கிறார்களே தவிர இதனால் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவது இல்லை. செந்தில் பாலாஜி ஜாமீனில் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை. இன்னும் இறுதி தீர்ப்பு வர வேண்டும். குஜராத், பீகார், வடகிழக்கு மாநிலங்களில் மது விலக்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் மது விலக்கு வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கையாக உள்ளது. ஆனால், மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வராது. இவ்வாறு அவர் கூறினார்.