குடும்ப அரசியல் பற்றி கேள்வி கேட்கும் தகுதி பாஜகவுக்கு இல்லை: ஆர்.எஸ்.பாரதி!

குடும்ப அரசியல் பற்றி கேள்வி கேட்கும் தகுதி பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச்.ராஜாவுக்கு இல்லை என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். திமுகவில் துரைமுருகன் உள்பட சீனியர்கள் பலரும் இருக்க அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்காமல், சில வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்த உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. ஆனால், விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதில் சொல்வேன் என உதயநிதி ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “பெரியாருக்கு அண்ணா துணையாக இருந்தார். அறிஞர் அண்ணாவுக்கு கலைஞர் கருணாநிதி துணையாக இருந்தார். கலைஞருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துணையாக இருந்தார். இப்போது ஸ்டாலினுக்கு துணையாக உதயநிதி இருக்கிறார். ஒரு இயக்கம் இப்படி இருந்தால் தான் கட்சி நன்றாக இருக்கும், வளரும். தலைவருக்கு அடுத்தபடியாக ஒருவர் இல்லாததன் காரணமாகவே அதிமுக தற்போது நான்கு துண்டுகளாக உடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

அமைச்சர்கள் நீக்கப்பட்டதற்கும், மீண்டும் சேர்க்கப்பட்டதற்கும் காரணம் என்ன என்ற என்ற கேள்விக்கு, “முன்பு முந்த்ரா விவகாரத்தில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி மத்திய நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதே கிருஷ்ணமாச்சாரிக்கு 1962ஆம் ஆண்டு இலாகா இல்லாத அமைச்சராக பதவி அளித்தார் நேரு. அமைச்சர்கள் நீக்கம், சேர்ப்பு எல்லாம் அரசியலில் சாதாரணமாக நிகழக்கூடியது. இந்திய வரலாறு, அரசியல் தெரியாமல் பேசுபவர்கள் தான் இதுபோன்ற கேள்விகளை கேட்பார்கள்.

செந்தில்பாலாஜி வழக்கைப் பொறுத்த வரை அது ஒரு முடித்து வைக்கப்பட்ட வழக்கு. நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்த விவகாரத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை. மற்ற மாநிலங்களில் செய்தது போல தமிழ்நாட்டிலும் தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்று பாஜக முயற்சி செய்தது. ஆனால், செந்தில் பாலாஜி தனது கொள்கையில் உறுதியாக இருந்துவிட்டார். அதனால் பாஜகவின் எண்ணம் பலிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

குடும்ப அரசியல் பற்றி கேள்வி கேட்கும் தகுதி பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச்.ராஜாவுக்கு இல்லை, திமுகவினர்தான் அதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.