சித்தராமையா மீது அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீதான முடா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையும் களமிறங்கி இருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்தான் முடா. இந்த முடா நிறுவனம், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது சட்டவிரோதம் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை கர்நாடகா லோக் ஆயுக்தா விசாரிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் சித்தராமையா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் முடா முறைகேடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. கர்நாடகா லோக் ஆயுக்தா வழக்குகளின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பதால் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இருவரும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். இதில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகி இருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வரிசையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் அமலாக்கத்துறையிடம் சிக்கி இருக்கிறார்.

முன்னதாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார். இதனடிப்படையில்தான் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஆளுநர் அனுமதி கொடுத்ததற்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த வாரம் கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனையடுத்து கர்நாடகா சித்தராமையா மீது லோக் ஆயுக்தா வழக்குப் பதிவு செய்ய பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.