நிலங்களை ஒப்படைக்கும் என் மனைவியின் முடிவை மதிக்கிறேன்: சித்தராமையா

இழப்பீடு வழங்கும் நோக்கில் வழங்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கும் தனது மனைவி பார்வதியின் முடிவை மதிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (முடா) இழப்பீடாக வழங்கிய நிலங்களை எனது மனைவி பார்வதி திருப்பி அளித்துள்ளார். என் மீது அரசியல் வெறுப்புணர்வை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் பொய் புகாரை உருவாக்கி எனது குடும்பத்தை சர்ச்சைக்கு இழுத்தது மாநில மக்களுக்கும் தெரியும். இந்த அநீதிக்கு அடிபணியாமல் போராடுவதே எனது நிலைப்பாடாக இருந்தது. ஆனால், எனக்கு எதிராக நடக்கும் அரசியல் சதியால் மனமுடைந்த என் மனைவி, நிலங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பது என்னையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனது 40 ஆண்டு கால அரசியலில் அவர் தலையிட்டதில்லை. குடும்பம்தான் அவருக்கு எல்லாம். அப்படிப்பட்டவர், எனக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு பலியாகி, உளவியல் சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார். அதற்காக வருந்துகிறேன். இருப்பினும், மனைகளை திருப்பித் தர என் மனைவி எடுத்த முடிவை நான் மதிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு மாற்றாக மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம், 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதற்கு எதிராக சித்தராமையா தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஆளுநர் அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தது. இதையடுத்து சித்தராமையா மீதான நில‌ முறைகேடு வழக்கை விசாரிக்குமாறு லோக் ஆயுக்தாவின் மைசூரு பிரிவு அதிகாரிகளுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து அறிக்கையை தாக்கல்செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லோக் ஆயுக்தாவின் மைசூரு பிரிவு போலீஸ்அதிகாரிகள், முதல்வர் சித்தராமையா மீது கடந்த செப்டம்பர் 27ம் தேதி நில முறைகேடு வழக்கை பதிவு செய்தனர்.

முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடைபெற உள்ளதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர், கர்நாடகா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பதில் அளித்த சித்தராமையா, ‘‘வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். காங்கிரஸ் மேலிடமும் எம்எல்ஏக்களும் எனக்கு ஆதரவாக இருப்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.