விசிகவின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு: எச். ராஜா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை முகாமை பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மது ஒழிப்பு மாநாடா, மது ஊக்குவிப்பு மாநாடா என்பது தெரியாத மாதிரி ஒரு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்துகிறது. விசிகவின் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு, மக்களை ஏமாற்றும் மாநாடு. பெண் வாக்காளர்களை திசை திருப்புவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 500 மதுபான கடைகளை மூடுவேன் என்று கூறிய திமுக அரசு, ஆயிரம் தனியார் கிளப்புக்கு அனுமதி அளித்துள்ளது. அந்த கிளப்பில் 150 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும் என்பது விதி, ஆனால் இங்கு விதிகள் ஏதும் கடைபிடிக்கப்படுவதில்லை. மதுக்கடைகளை திறந்தவர்கள்தான் மதுக்கடைகளை மூட வேண்டும், மத்திய அரசு மூடாது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம் தொடர்ந்து அந்த விதிமுறைகளை பின்பற்றலாம். ஆனால் இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுதான் திராவிட மாடல். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கொட்டு வைதுள்ளது. நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது.

பழனி கோபுரத்தில் மேற்பகுதி சிதலமடைந்துள்ளது குறித்து பேசிய எச். ராஜா, அறநிலையத்துறையின் ஊழலை காட்டுகிறது என்றும், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து செய்யப்பட்ட கோவில் புனரமைப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேகங்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் ஸ்டாலின் மூலவர் என்றும் உதயநிதி ஸ்டாலின் உற்சவர் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதை குறிப்பிட்ட எச். ராஜா, மூலவர் எப்போதுமே வெளியே வர மாட்டார், இனி ஸ்டாலினும் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள மாட்டார் என்று சட்டத்துறை அமைச்சரை ஒப்பு கொண்டுள்ளார் என்றார். மேலும் அதிமுகவுக்கு 15 சதவீத வாக்கு குறைந்துள்ளதாக கூறிய எச். ராஜா, எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் அதிமுக செல்கிறதா என்று தொண்டர்கள் நினைத்திருக்கலாம், அதனால் அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது என்றும் கூறினார்.