புதிய கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்!

தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் பிகாரில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

நாட்டில் உள்ள பல அரசியல்கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து, அந்த கட்சிகளை வெற்றிபெறச் செய்து புகழ் பெற்றவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2021-ம் ஆண்டில் இவர் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை தேர்தல் வியூகங்களை வகுத்துகொடுத்தார். அந்த கட்சியும் அமோக வெற்றிபெற்றது. அதன்பின் இனி தேர்தல்வியூகங்களில் ஈடுபடபோவதில்லை என்றும், பிகாரில் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். அதன்படி பிகாரில் தனது பாதயாத்திரையை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் தொடங்கினார். பிகார் முழுவதும் 3,000 கி.மீ தூரம் பாதயாத்திரை சென்றார்.புதிய கட்சி தொடங்கி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார்.

அதன்படி தனது பாதயாத்திரையின் இரண்டாம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நேற்று அவர் சொந்த கட்சியை தொடங்கினார். அதற்கு ஜன் சுராஜ் கட்சி எனபெயர் வைத்துள்ளார். பிகாரில் உள்ள முஸ்லிம்களும், பட்டியலின மக்களும் ஜாதி, மத அடிப்படையில் வாக்களிப்பதை நிறுத்திவிட்டு, தங்களின் குழந்தைகள் எதிர்காலம் கருதி வாக்களிக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை முக்கிய கட்சிகளுக்கு போட்டியாக பிரசாந்த் கிஷோர் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.