தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்கும் இல்லைமா: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் எங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கின்றது என்பதை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காட்ட வேண்டும். இப்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்கும் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்துவைத்தார். தொடர்ந்து, தாளியூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 58.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார அலகு கட்டடங்களையும் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிங்காநல்லூர் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடங்கள், தாளியூர் கட்டடங்கள் என மொத்தமாக 2.08 கோடி மதிப்புடைய புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல, ஜிகேஎன்எம் தனியார் மருத்துவமனையிலும் இன்று புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுகாதார துறையில் ஏற்கனவே இருக்கின்ற பழைய கட்டிடத்திற்கு கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்படுகின்றது. அந்த இடங்களில் புதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டியது இல்லை. மருத்துவத் துறையில் மருத்துவர்கள், செவலியர்கள், மருந்தாளுநர்கள் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுகின்றது. விரைவில் 2,253 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

1,066 சுகாதார ஆய்வாளர் நியமனம் குறித்து 38 வழக்குகள் போட்டிருக்கின்றனர். இந்த வழக்கு போட்டவர்களை அழைத்து பேசி வருகின்றோம். காலியாக இருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணி நியமனம் நேற்று செய்யப்பட்டு இருக்கின்றது. வழக்குகள் இருப்பதால் பணி நியமனங்களில் தாமதம் ஆகின்றது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை, 13 வகையான தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன. சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் வரும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. எம்ஆர்பி தேர்வுகள் மூலம் உரிய தகுதியின் அடிப்படையில் முறையாக வந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அரசு மருத்துவமனைகளில் கிரிஸ்டல் நிறுவனம் மூலம் ஒப்பந்தப் பணியாளர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அது தொடர்பான புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பணிகள் பருவமழை வரும் போது செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. மழை பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பின்பு தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழகத்தில் எங்கே டெங்கு இருக்கின்றது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும். டெங்கு இறப்பு அதிமுக ஆட்சியில்தான் அதிகம். அதிமுக ஆட்சியில் 2012 இல் டெங்கு இறப்பு 66 பேர். 2017 ல் 65 பேர். தமிழக வரலாற்றில் அதிகப்படியான டெங்கு இழப்புகள் இதுதான். இந்த ஆண்டில் டெங்கு காரணமாக இறந்தது ஆறு பேர் தான். அதுவும் தனியார் மருத்துவமனை, முறையான சிகிச்சை இல்லாதது, நோய் எதிர்ப்பு சிகிச்சை இல்லாதது போன்ற காரணத்தால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு எங்கேயுமே இல்லை, பதட்டத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.