வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, 24 மணி நேரமும் இயங்கி வரும் அவசர அழைப்பு மையத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், மழை அளவு சேகரிக்கப்படும் முறை, வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்படும் முறை, பேரிடர் காலத்தில் பல் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டிஎன் அலர்ட் செயலியில், வானிலை முன்னறிவிப்பு, பெறப்பட்ட மழை அளவு ஆகியன குறித்து ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா, இச்செயலியின் மூலம் பொதுமக்கள், வானிலை முன்னெச்சரிக்கை, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர் தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘டிஎன்-ஸ்மார்ட்’ இணையதள வசதி குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், சென்னை நிகழ் நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு மற்றும் பொதுவான எச்சரிக்கை நடைமுறையின் செயல்பாட்டையும் கேட்டறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அனைவரும் விழிப்புடன் இருந்து, பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்கி, விரைவாக தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து வகையான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா, பேரிடர் மேலாண்மை இயக்குநர் வ.மோகனச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.