மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுகிறது!

மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் கமிட்டி செயலாளர் இன்று அறிவித்தார்.

மரபணு செல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றும் மைக்ரோ ஆர்என்ஏ என்ற சிறிய மூலக்கூறினைக் கண்டுபிடித்தற்காக விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமெரிக்க உயிரியியலாளர்கள் இவர்கள் இருவரும் மைக்ரோ ஆர்என்ஏ மற்றும் படியெடுத்தலுக்கு (transcription) பின்பு மரபணு வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதில் அதன் பங்களிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தற்காக கூட்டாக உயரிய இந்த விருதினை பெறுகின்றனர். நோபல் கமிட்டி, “இவர்களின் கண்டுபிடிப்பு, உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கான அடிப்படை முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன” என்று தெரிவித்துள்ளது.

நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒரே மரபணு மூலக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், தசைகள் மற்றும் நரம்புகள் போன்ற பல்வேறு வகையான செல்கள் பல்வேறு வகையான செயல்களைச் செய்கின்றன. மரபணு ஒழுங்குமுறை செயல்பாடுகள் மூலம் இது சாத்தியமாகிறது. அப்போது இந்த செல்கள் அவற்றுக்குத் தேவையான மரபணுவை மட்டும் செல்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. அம்ரோஸ் மற்றும் ருக்குன் ஆகியோரது மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்பு, இந்த செயல்பாட்டின் போது புதிய வழியை வெளிப்படுத்தியது. அவர்களது கண்டுபிடிப்புகள் உயிர்கள், குறிப்பாக மனித உயிர்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள முக்கிய பங்காற்றுகின்றன என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க அவரது நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும் (செவ்வாய்க்கிழமை) வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை மறுநாள் (புதன்கிழமை), இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.14-ம் தேதி திங்கள்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளன. நோபல் வெற்றியாளர்களுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.