ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்பதன் அர்த்தம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலை சம்பவத்தை அடுத்து சென்னையில் காவல்துறையில் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி அருண் ஐபிஎஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு அளித்த பேட்டியில், ரவுடிகளின் அட்டகாசத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் ஐபிஎஸ் எச்சரித்தார். குறிப்பாக ‘ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முக்கியமான வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். தற்காப்பிற்காக என்கவுண்டர் நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கிடையே, அண்மையில் திருவொற்றியூர் ரவுடிகளின் குடும்பத்தாரை போலீஸ் உதவி கமிஷனர் இளங்கோவன் எச்சரிப்பதாக வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. உதவி கமிஷனர் இளங்கோவன் எச்சரித்தது குறித்து மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்பதற்கு என்ன அர்த்தம் என விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.