ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் ஆவின் நிர்வாகம் நடப்பாண்டின் மார்ச் மாதம் 65 மி.லி. சாக்கோபாருக்கு ரூ.2-ம், 100 மி.லி. கிளாசிக் கோன், 125 மி.லி. வெண்ணிலா பால் ஐஸ்கிரீம் வகைகளுக்கு ரூ.5-ம் என சிறிதளவு விற்பனை விலையை உயர்த்திய ஆவின் நிர்வாகம் தற்போது 65 மி.லி. சாக்கோபார் (ரூ.5) தொடங்கி 1000 மி.லி. வெண்ணிலா (ரூ.70) உள்ளிட்ட ஒவ்வொரு வகையான ஐஸ்கிரீம்களுக்கும் அதற்கேற்ற வகையில் விற்பனை விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுத்தது. இதனை கடந்த 1-ந்தேதி முதல் ஆவின் நிர்வாகம் சத்தமின்றி அமல்படுத்தியுள்ளதோடு திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பயன்படும் வகையிலான 4,500 மி.லி. மொத்த ஐஸ்கிரீம் வகைகள் ரூ.80 முதல் ரூ.100 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது.
ஐஸ்கிரீம் என்பது அத்தியாவசிய உணவு பொருளாக இல்லை என்றாலும் கூட பால் சார்ந்த உபபொருள் என்பதால் பால் கொள்முதல் விலை உயர்வு இல்லாத இந்த தருணத்தில் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதே சமயம் ஆவினுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய இதுபோன்ற விற்பனை விலை உயர்வு தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயம் என்றாலும் கூட பால் கொள்முதல் விலை உயர்வை அரசு அறிவிக்கும் சமயத்தில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் சார்ந்த அனைத்து வகையான பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்துவது தான் சரியான நடைமுறையாக இருக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.