ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக!

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நண்பகல் 12 மணி நிலவரப்படி 48 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் அக்கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

ஹரியானா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 வாக்காளர்களில் ஒரு கோடியே 38 லட்சத்து 19 ஆயிரத்து 776 வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறின.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முன்னிலை நிலவரப்படி, நண்பகல் 12 மணி அளவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும், சுயேட்சைகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறார்கள். அதேநேரத்தில், எந்த ஒரு தொகுதியிலும் யாருக்கும் வெற்றி உறுதிப்படுத்தப்படவில்லை.

46 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி அதற்கான வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமானால் அது ஹாட்ரிக் வெற்றியாக அமையும். தற்போதைய நிலவரப்படி, பாஜக ஆட்சியில் உள்ள பத்து அமைச்சர்களில் ஐந்து பேர் முன்னிலை வகிக்கின்றனர். முதல்வர் நயாப் சைனி (லட்வா), மூல் சந்த் சர்மா (பல்லாப்கர்), அபே சிங் யாதவ் (நாங்கல் சௌத்ரி), மஹிபால் தண்டா (பானிபட் கிராமம்) மற்றும் ஜெய் பிரகாஷ் தலால் (லோஹாரு) ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான அபய் சவுதாலா, எல்லனாபாத் தொகுதியில் போட்டியிட்டார். இவர், காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சிங் பெனிவாலைவிட 5,700 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

முன்னாள் துணை முதல்வரும் ஜனநாயக ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான துஷ்யந்த் சவுதாலா, உச்சன கலன் சட்டமன்றத் தொகுதியில் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். முன்னணி நிலவரம் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதால், அக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “விரக்தி அடைய தேவையில்லை. ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை. மைண்ட் கேம்கள் விளையாடப்படுகின்றன. நாங்கள் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை. ஆட்சி அமைப்பதற்கான ஆணையை நாங்கள் பெருவோம். ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்” என தெரிவித்துள்ளார்.