முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தெலுங்கானா காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாரூதீன், அக்டோபர் 8ம் தேதியான இன்று, அமலாக்கத் துறை (ED) அலுவலகத்தில் பண மோசடி வழக்கில் ஆஜரானார்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் (HCA) நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக, அசாரூதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. கிரிக்கெட் சங்கத்தில் ஜெனரேட்டர், தீயணைப்பு உபகரணங்கள் வாங்குவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. முந்தைய விசாரணைக்கு, அதாவது அக்டோபர் 3 அன்று, அசாரூதீன் நேரில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 8 ஆம் தேதி அவரை வரும்படி அமலாக்கத் துறை அழைத்தது. அவரின் கோரிக்கையின்பேரில் புதிய சம்மன் வழங்கப்பட்டது.
ஹைதராபாத்தின் உப்பல் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான டீசல் ஜெனரேட்டர்கள், தீயணைப்பு உபகரணங்கள், டெண்ட் வாங்கியதில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. HCA நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை நடத்திய சோதனைகள் மூலம் தெரியவந்தது.
அசாரூதீன் 2009 ஆம் ஆண்டு மொராதாபாத் லோக் சபா தொகுதியில் வெற்றிபெற்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தற்போது, அவர் தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக செயல்படுகிறார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அசாருதீன் வாழ்நாள் தடைக்கு உள்ளானவராகும். இப்போது இங்கும் பஞ்சாயத்து வெடித்துள்ளது. விசாரணையின் முடிவில் அசாருதீனுக்கு எதிராக எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிய வரும்.