14 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.8) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூ.38,698.80 கோடி முதலீட்டுக்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

தமிழகத்தில் ரூ.38,698.80 கோடி முதலீட்டுக்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இம்முதலீடுகள் மின்னணு துறை சார்ந்த பிரின்டெட் சர்க்யூட் போர்டுகள் (PCB), குறைந்த மின்னழுத்த பேனல்கள், போன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரி பாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள், மருத்துவத் துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்துபொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா உற்பத்தி, மின் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (ரூ.9000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5000 நபர்கள்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசாண் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (ரூ.13180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 14,000 நபர்கள்), தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் PSG குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (ரூ.10375 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 3000 நபர்கள்), அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 15,000 நபர்கள்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1395 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1033 நபர்கள்), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ.612.60 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1200 நபர்கள்) ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீட்டுத் திட்டங்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.