கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்ததால் சர்ச்சை எழுந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்” என பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தொடங்கி 99 ஆண்டு நிறைவடைந்து, 100வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி தமிழகத்தில் 57 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைத்திருந்தார். அதிமுக அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகிக்கும் கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், ஆர்.எஸ்.எஸ் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், அஇஅதிமுக கொள்கை, குறிக்கோள், கோட்பாடு மற்றும் கழகத்தின் சட்ட திட்ட விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டார் என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள இருப்பதால், அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜாவிடம், ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடக்கி வைத்ததால் கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எச்.ராஜா, “தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் தளவாய் சுந்தரம். அதற்கு முன்னதாக ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். டெல்லியின் தமிழக பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார் தளவாய் சுந்தரம். குமரி மாவட்ட அதிமுகவில் முக்கிய முகமாக இருக்கும் தளவாய் சுந்தரத்தின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவியைப் பறித்தால் கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.