பாபா சித்திக் படுகொலைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் பிரிவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் மும்பை பாந்திரா பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிரா அரசியலை உலுக்கியுள்ள இந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவின் தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானேன். குடிமை சமூகத்தில் இது போன்ற வன்முறை செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்கு உரியவையாகும். பாபா சித்திக்கின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

66 வயதான பாபா சித்திக் கடந்த 1976 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார். மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர். அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) நிர்மல் நகரில் உள்ள அவரது மகனின் அலுவலகத்துக்கு வெளியில் இருந்த போது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இரண்டு முதல் மூன்று ரவுண்டுகள் வரை சுடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை மூன்று பேர் நிகழ்த்தியுள்ளனர். அதில் இருவரை போலீஸார் பிடித்துள்ளனர். ஒருவர் மாயமாகி உள்ளார். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.