சங்கரலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு, “தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம். அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல. ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்! – என அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று. அந்த உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னை மாகாணம் என்றிருந்த தமிழகத்துக்கு “தமிழ்நாடு” எனும் பெயர் சூட்டக் கோரியும், தமிழை ஆட்சி மொழியாக்கக் கோரியும் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் என்பது நினைவுகூரத்தக்கது.