தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனே வெளியேற வேண்டும்: நெதன்யாகு!

தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருக்கிறார்.

காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக சண்டையிட்டு வருகிறது. காசாவில் கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரமாக்கி இருக்கிறது. குறிப்பாக, வடக்கு காசாவில் கடந்த 9 நாளில் 300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு ஹமாசின் ஆதிக்கம் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார். இதே போல, லெபனானின் நபாதியா நகரில் இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 1910ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மார்க்கெட் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 12 குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் 40 கடைகள் முற்றிலும் இடிந்தன. அஹெல் எல் குரான் மசூதி மற்றும் அதை சுற்றியுள்ள கட்டிடங்களும் தரைமட்டமாகின.

லெபனான் ராணுவத்திற்கு உதவ, தெற்கு லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் ஐநா அமைதிப்படை வீரர்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சண்டையிட்டு தாக்குதல் நடத்துகிறது. 2வது முறையாக நேற்றும் ஐநா அமைதிப்படை வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் ஐநா அமைதிப்படை வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென ஐநா பொதுச் செயலாளர் கட்டரசிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தி உள்ளார். அமைதிப்படையில் 34 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 900 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் ஒருபகுதியாக ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானின் சட்டத்துறை, நிர்வாகத்துறை, எரிபொருள் விநியோகம், நகராட்சி, போக்குவரத்து தொடர்பான இணையதளங்கள் உள்பட பல்வேறு முக்கிய துறைகள் மீதான சைபர் தாக்குதலால் ஈரான் அரசு முடங்கி போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஈரான் அணுசக்திதுறையின் ரகசிய தகவல்களை இஸ்ரேல் திருடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.