கோவிட்-19 தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி!

கோவிட்-19 தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக பிரியா மிஸ்ரா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், கோவிட்-19 தடுப்பூசிகள் ரத்தம் உறைதல் உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி இருந்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வழக்கறிஞரிடம் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா, உங்களுக்கு பங்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என நீதிபதிகள் வினவினர்.

அதற்கு அவர், தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், தனக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடுப்பூசி போட்டுக்கொள்வதை மக்கள் தவிர்த்திருந்தால் அது பொது சுகாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என குறிப்பிட்டனர். மேலும், இந்த மனுக்கள் தேவையற்ற அச்சத்தை எழுப்பும் முயற்சி என்றும், இதற்கு ஊக்கம் அளிக்க விரும்பவில்லை என்றும், இது பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் கூறி அவற்றை தள்ளுபடி செய்தனர்.