தேர்தலின் போது வழங்கும் இலவசங்களை லஞ்சம் என்று அறிவிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவின் மீது மத்திய அரசு மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இதனால் மக்கள் தான் ஏமாற்றப்படுகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை அளிப்பதை தடுக்கும் விதமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற இலவச அறிவிப்புகளை லஞ்சம் என்று அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தேர்தல் இலவசங்கள் என்பது நமது கலாசாரத்தை கெடுக்கும் விதமாக அமைந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஆகிவை வழங்குவது என்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதால், அவ்வாறு கொடுக்கப்படும் இலவசங்களை லஞ்சம் என்று அறிவிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்ததோடு, இதே கோரிக்கைகளை கொண்டு உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக நிலுவையில் இருக்கும் வழக்கோடு இந்த மனுவும் இணைத்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.