ஈரான் மீதான எங்களின் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது: இஸ்ரேல் பிரதமர்!

எங்களை பொருத்தவரை இஸ்ரேலின் நலன் தான் முக்கியம். ஈரான் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். ஈரான் மீதான எங்களின் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. இன்னும் போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் – காசா போர் என்பது பிற நாடுகளுடனான மோதலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் – லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. தற்போது மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் ஆகிய நாடுகள் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கு ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்களை இஸ்ரேல் வான்வெளி தாக்குதலில் கொன்றது தான் காரணம். அதாவது போர் மற்றும் மோதல் போக்கிற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா, ஈரானின் ஜெனரல் அப்பாஸ் நில்போரோஷன் ஆகியோரின் மரணம் போன்றவையால் ஈரான் கடுமையான கோபத்தில் உள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகியவை ஈரான் ஆதரவு அமைப்புகள் என்பதால் அந்த நாடு கோபமடைந்துள்ளது. இதனால் தான் ஈரான் தற்போது நேரடியாக இஸ்ரேலுடன் மோதுகிறது.

முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. உள்ளது. இந்த தாக்குதலுக்கு இன்னும் ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தவில்லை. மாறாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் கூட, ‛‛எங்களை தாக்குபவர்களை நாங்களும் திரும்ப தாக்குவோம். இதில் எந்த பாரபட்சமும் பார்க்க மாட்டோம்” என கூறியுள்ளார். அதேபோல் ஈரானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கலாம் என்பதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அதோடு இஸ்ரேல் – ஈரான் இடையே தொடர்ந்து கொந்தளிப்பான நிலை உள்ளது. இருநாடுகளும் எப்போது வேண்டுமானாலும் வான்வெளி தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உள்ளது.

இதற்கிடையே தான் இஸ்ரேலுக்கு உதவி செய்து வரும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு முக்கிய கோரிக்கையை வைத்தது. ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான THAAD அமைப்பை வழங்கி உள்ள நிலையில் தான் அந்த நாட்டுக்கு முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தொலைபேசியில் பேசினர். அப்போது ஜோ பைடன் சார்பில், ‛‛ஈரான் மீது அணுஆயுத கட்டமைப்பில் தாக்குதல் நடத்த வேண்டாம். அதேபோல் கச்சா எண்ணெய் கிடங்குகளில் தாக்குதல் நடத்த வேண்டாம். இந்த தாக்குதல்கள் என்பது உலகளவில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதோடு அமெரிக்க அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும்” என்று பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ஜோபைடன் மற்றும் நெதன்யாகு ஆகியோர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரி கூறியதாக வாஷிங்டன் போஸ்ட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் அந்த அதிகாரி, ‛‛ஜோபைடன் -நெதன்யாகு இடையேயான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் ஒரு உறுதியை அளித்துள்ளது. ஈரான் மீது அணுஆயுத தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. ஈரானின் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது” என கூறியுள்ளது.

இதற்கிடையே தான் அமெரிக்க அதிகாரியின் பத்திரிகைக்கு அளித்த இந்த தகவல் என்பது இஸ்ரேலை கோபப்படுத்தி உள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தரப்பில் பரபரப்பான அறிக்கை என்பது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‛‛நாங்கள் அமெரிக்காவின் கருத்துகளை கேட்டோம். ஆனால் நாங்கள் எப்போதும் எங்கள் நாட்டின் நலன் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுப்போம். எங்களை பொறுத்தவரை நாட்டின் நலன் தான் முக்கியம்” என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரான் மீதான தாக்குதல் விஷயத்தில் அமெரிக்கா கூறுவது போல் நடந்து கொள்ள முடியாது. இஸ்ரேலின் பாதுகாப்பு நலன் சார்ந்து தான் முடிவெடுக்க முடியும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அலுவலகம் மூலம் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் ஈரான் மீதான தாக்குதல் விஷயத்தில் அமெரிக்காவின் பேச்சை கேட்க முடியாது என்று நெதன்யாகு மறைமுகமாக தெரிவித்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.