சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு: மு.க.ஸ்டாலின்!

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களுக்காக இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கனமழையின் காரணமாக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும், தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக, எங்களது ஆட்சிக் காலங்களில் மேற்கொண்டது போல், அம்மா உணவகங்களில் மூன்று நேரமும் தரமான உணவை வழங்க உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.