நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 94 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுயாகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தின்போது, டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியுள்ளது. அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால், டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 94 பேர் இதுவரை உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், சாலைமார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.