உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று தனது தொகுதியான வாராணசிக்கு சென்றார். காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில் அங்கு ரூ.110 கோடி மதிப்பில் ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் கிழக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். ஆண்டுக்கு 30,000 கண் அறுவை சிகிச்சைகளை இலவசமாக நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு மாலையில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6,100 கோடி ஆகும்.
வாராணசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆக்ரா விமான நிலையத்தில் ரூ.570 கோடி மதிப்பிலும், தர்பங்கா விமான நிலையத்தில் ரூ.910 கோடி மதிப்பிலும், பாக்தோக்ரா விமான நிலையத்தில் ரூ.1,550 கோடி மதிப்பிலும் புதிய முனையங்களின் கட்டிடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ரேவா விமான நிலையம், மா மகாமாயா விமான நிலையம், அம்பிகாபூர் விமான நிலையம், சர்சவா விமான நிலையங்களில் ரூ.220 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய முனைய கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். வாராணசி விளையாட்டு வளாகத்தின் மறுமேம்பாட்டுப் பணிகளின் 2 மற்றும் 3-வது கட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்.
நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
காசி விஸ்வநாதரின் அருளால் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். உத்தர பிரதேசம், பிகார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த விமான நிலையங்களின் மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இதன்மூலம் நாட்டின் விமான சேவை மேம்படும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் 23 திட்டங்கள் மூலம் 2.3 கோடி பேர் பலன் பெறுவார்கள்.
கடந்த 125 நாட்களில் மட்டும் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டங்கள் மூலம் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் பெரிதும் பலன் அடைவார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் ஊழல்கள் குறித்து மட்டுமே செய்திகள் வெளியாகி வந்தன. கோடிக்கணக்கில் ஊழல், லட்சக்கணக்கில் ஊழல் என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது ஊடகங்களில் நலத்திட்டங்கள் குறித்து மட்டுமே செய்திகள் வெளியாகி வருகின்றன. மக்களின் வரிப்பணம் மக்களுக்காக மட்டுமே செலவிடப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் நமது நாடு அதிவேகமாக முன்னேறி வருகிறது.
புதிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில்வே வழித்தடங்கள், புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாடு முழுவதும் 70 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 150-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்படுகின்றன. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் ராம பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ராமர் கோயிலால் அயோத்தி புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. விரைவில் நொய்டா, ஜெவர் நகரங்களில் பிரம்மாண்ட விமான நிலையங்கள் உருவாகும்.
இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலில் களமிறக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள் ஒரு காலத்தில் சிகிச்சைக்காக டெல்லி அல்லது மும்பை செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இப்போது அவரவர் மாநிலங்களிலேயே மிகப்பெரிய மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கி உள்ளன. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இ-சஞ்சீவனி திட்டத்தில் மக்களுக்கு இலவசமாக மருத்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.